பயங்கரவாத திட்டங்களுடன் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் நேபாள நாட்டின் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையமுயன்ற பாகிஸ்தானியர் உள்ளிட்ட மூன்று பேரை உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புபடை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியா-நேபாளம் எல்லை வழியாக பயங்கரவாதிகள் சிலர் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்தும் திட்டத்துடன் நுழைய இருப்பதாக உளவுத்துறை மூலம் உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேபாள எல்லை பகுதியில் பயங்கரவாத தடுப்பு படை போலீஸார் கடுமையான கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அதன்விளைவாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு படை போலீஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த முகமது அல்தாப் பட், இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த சையீது கஜ்பாபார், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த நசீர் அலி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நேபாள எல்லை வழியாக போலி ஆவணங்களுடன் இந்தியாவுக்கள் நுழைய முயன்றனர். இவர்கள் மூவரும் இந்தியாவில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் பயங்கரவாத சதிச் செயல்கள் தவிர்க்கப்பட்டதாகவும், எல்லைப் பகுதியில் மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் பயங்கரவாத தடுப்பு படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சாதாரண நாட்களிலேயே இதுபோன்ற ஊருடுவல்கள் நடக்கும் நிலையில் இந்தியாவில் தேர்தல் நடைபெறும் காலத்தில் தீவிரவாதிகள் ஊருடுவ முயன்றதால் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.