நிவாரணம்... மணிப்பூர் கலவரத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம்!


மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை

மணிப்பூர் கலவரத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று மாநில உள்துறை ஆணையாளர் ரஞ்சித்சிங் கூறியுள்ளார்.

மணிப்பூரில் பற்றி எரியும் வாகனங்கள்

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குக்கி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மே 3-ம் தேதி வெடித்தது. இரண்டு மாதங்களாக நீடித்த வன்முறையால் 175 பேர் பலியாயினர்.

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக நடைபெற்ற அமைதிப்போராட்டம்

இந்தபோராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு, உடமைகளை விட்டு அகதிகளாக வெளியேறினர். இந்த கலவரத்தில் ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மணிப்பூர் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மணிப்பூர் வீதிகளில் நிர்வாணமாக்கி இழுத்து வரப்பட்ட பெண்கள்

இதுதொடர்பாக மாநில உள்துறை ஆணையாளர் ரஞ்சித்சிங் வெளியிட்ட அரசாணையில்," மணிப்பூர் கலவரத்தில் கூட்டுப் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை இழப்பீடு வழங்கப்படும். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம்வரை வழங்கப்படும். ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை அளிக்கப்படும்.

உயிரிழந்த மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போக செய்யப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை இழப்பீடு அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கோ, அவர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களுடைய குடும்பத்தினருக்கோ இந்த இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

மணிப்பூர் ஐ.ஜி முய்வா

மணிப்பூர் ஐ.ஜி முய்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், " மணிப்பூர் கலவரத்தில் 175 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1,108 பேர் காயமடைந்துள்ளனர். 32 பேர் காணாமல் போனார்கள். 4 ஆயிரத்து 786 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. 386 வழிபாட்டு தலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. கலவரக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகளில், 1,359 துப்பாக்கிகளும், 15 ஆயிரம் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் கலவரத்தில் 5 ஆயிரத்து 172 தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பலியான 175 பேரில் 79 பேரின் உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளன. 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை. 9 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. கலவரம் தொடர்பாக 9 ஆயிரத்து 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இயல்புநிலையை திரும்ப செய்ய போலீஸாரும், மத்தியப் படைகளும் கூட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன" என்றார்.

x