புதுடெல்லி: குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவப் பணியாளர் களை ஈடுபடுத்த வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார துறை செயலர் அபூர்வ சந்திரா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: எம்பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் தோல் புண்களிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகளை அதற்கென தேர்வு செய்யப்பட்ட பிரத்தேயகமான ஆய்வகங்களுக்கு உடனடியாக சோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மரபணு வரிசை: அந்த ஆய்வகத்தில் பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவாக இருக்கும்பட்சத்தில் அந்த மாதிரிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சில்- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜிக்கு (ஐசிஎம்ஆர்-என்ஐவி) மரபணுவரிசை முறையை தீர்மானிப்பதற்காக அனுப்பி வைக்கப்படும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், பாதிப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து கண்காணிக்க வேண்டும்.
70-க்கும் மேற்பட்ட நாடுகளில்இந்த வைரஸ் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பு ஆகஸ்ட் 14-ம் தேதியன்று குரங்குஅம்மை பாதிப்பை சர்வதேச சுகாதார நெருக்கடியாக (பிஎச்இஐசி) அறிவித்தது.
2-வது முறை அறிவிப்பு: 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது. 2022-ல்கிளேட் 2 திரிபு எம்பாக்ஸ் வைரஸ் அதிகளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியபோது இதேபோன்ற அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.
அந்த வகையில் தற்போது பரவி வரும் எம்பாக்ஸ் வைரஸ் கிளேட் 1 வகையைச் சார்ந்தது. இது, கிளேட் 2-வை விட அதிக வீரியமிக்கது என்பதுடன் வேகமாக பரவக்கூடியது. காங்கோவுக்குப் பிறகு எம்பாக்ஸ் கிளேட் 1பி வைரஸ் பாதிப்பு ஸ்வீடன் மற்றும் தாய்லாந்தில் தலா ஒருவருக்கு கண்டறியப்பட்டது.
அதன்பிறகு, ஆப்பிரிக் காவைச் சாராத மூன்றாவது நாடாக இந்தியாவில் ஒருவருக்குஎம்பாக்ஸ் 1பி வைரஸ் பாதிப்பு அண்மையில் கண்டறியப்பட்டது. இவ்வாறு அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: கேரள மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை (எம்பாக்ஸ்) பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. தற்போது குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் எர்ணாகுளத்தை பூர்வீகமாக கொண்டவர். அண்மையில்தான் இவர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பாக, மலப்புரத்தைச் சேர்ந்த 38 வயது நபர் அதிக காய்ச்சல் மற்றும் உடலில் தடிப்புகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் மாநிலத்தின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது