டெல்லியில் ஸ்டாலின் முதல் தமிழர்களை ‘மகிழ்வித்த’ திசாநாயக்க வரை - டாப் 10 விரைவுச் செய்திகள்


டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் மனு: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.

இந்தச் சந்திப்பின் போது, சமக்ர சிக்‌ஷ அபியான் என்ற மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும், சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.

சந்திப்பு எப்படி? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்: பிரதமருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி வந்தேன். பிரதமர் மோடியை சந்தித்தேன். இந்த சந்திப்பு ஓர் இனிய சந்திப்பாக அமைந்தது. பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் எங்களிடம் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கைகளில் தான் இருக்கிறது. சந்திப்பின் போது 3 முக்கியக் கோரிக்கைகளை வைத்துள்ளோம்” என்றார்.

மேலும், “இந்த 3 முக்கிய கோரிக்கைகளையும் கவனமாக கேட்ட பிரதமர், இதுகுறித்து, கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நலன் காக்க தேவையான இந்த 3 கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். தமிழகத்துக்கு ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. அவற்றை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்த 3 கோரிக்கைகள் தொடர்பாகத்தான் 45 நிமிட சந்திப்பில் பேசப்பட்டது. எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

யெச்சூரி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்மையில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் புதுடெல்லியில் உள்ள இல்லத்துக்கு நேரில் சென்று, அவரவது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சீதாராம் யெச்சூரியின் மனைவி சீமா சிஸ்டி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.

ஏடிஎம் கொள்ளைக் கும்பலை சினிமா பாணியில் பிடித்த போலீஸ்: கேரள மாநிலத்தில் உள்ள ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் கண்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற வட மாநிலக் கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் சினிமா பாணியில் விரட்டிப்பிடித்தனர். சம்பவத்தின்போது போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் காலில் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு: மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த கே.ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அதன்படி புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிபந்தனையற்ற மன்னிப்புடன் ஜாமீன் கோரிய மகாவிஷ்ணு: மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய வழக்கில், போலீஸார் பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தனக்கு ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை என்றும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

கேரளாவில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை உறுதி: கேரளாவில் இரண்டாவது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேரள மாநில சுகாதாரத் துறை, இந்நோய் தொடர்பான அறிகுறியுள்ளவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

“ராகுல் காந்திக்கு ‘எம்எஸ்பி’ விரிவாக்கம் தெரியுமா?” - ‘எம்எஸ்பி-யின் விரிவாக்கம் என்ன என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா?’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சாடியுள்ளார். மேலும், ஹரியானாவில் உள்ள பாஜக அரசு 24 பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு: உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை நாட்களில் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தலைவர் பலி: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திங்கள்கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், முழுக்க முழுக்க ஈரான் நேரடியாக மோதலில் ஈடுபடாமல் மறைமுகமாகவும், போரைத் தவிர்க்கும் வண்ணமே ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக, தனது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் வகையில் இவ்வாறு செயல்படுவதாக கூறப்படுகிறது.

அரசியல் பழிவாங்கப்பட்டவரை ஆளுநராக்கிய இலங்கை அதிபர்: அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனை, இலங்கையின் வட மாகாணத்தின் ஆளுநராக இலங்கையின் புதிய அதிபரான அநுர குமார திசாநாயக்க நியமனம் செய்துள்ளது, வட மாகாண மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்த காலகட்டத்தில் இந்திய - இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார். நேர்மையான அரசு பணியாளராக அறியப்பட்ட வேதநாயகன், கடந்த 2020 பிப்ரவரியில் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பணி ஓய்வுபெற மூன்று மாதங்கள் இருந்த நிலையில், ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சி காலத்தில் அரசியல் கட்டாயங்களினால் வலுக்கட்டாயப்படுத்தி வேதநாயகன் விருப்ப ஓய்வை பெறவைக்கப்பட்டார். இந்நிலையில், அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனை, இலங்கையின் வட மாகாண ஆளுநராக அதிபர் அநுர குமார திசாநாயக்க நியமனம் செய்துள்ளது இலங்கை தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

55,478 ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்க திட்டம்: நடப்பாண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2-வது கட்டமாக 55,478 கையடக்கக் கணினிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

x