டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, முதல்வர் மாற்றம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத் துறை காவல் விசாரணையில் இருந்த வந்த கேஜ்ரிவால் நேற்று மீண்டும் டெல்லி நகர நீதிமன்றத்தில் நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கேஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத் துறை கோரியது. அதன்பேரில் முதல்வர் கேஜ்ரிவாலை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் அவரே முதல்வராக தொடருவார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. ஆனால், சிறையில் இருந்து ஆட்சி நடத்துவதா என எதிர்ப்புத் தெரிவித்த டெல்லி எதிர்க்கட்சியான பாஜக, முறைகேடு வழக்கில் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி சிவில் லைன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் முதல் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் வரத் துவங்கியுள்ளனர். அங்கு அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில், டெல்லியில் முதல்வரை மாற்ற ஆம் ஆத்மி பரிசீலிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவாலை முதல்வர் பதவிக்கு கொண்டு வர பரிசீலனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.