“காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒரு பொய் இயந்திரம்” - அமித் ஷா விமர்சனம்


முல்லானா (ஹரியானா): காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு பொய் இயந்திரம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் முல்லானா மற்றும் ரேவாரி நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், "இந்தத் தேர்தல் பாஜக ஆட்சி அமைப்பதற்கானது மட்டுமல்ல; ஹரியானாவின் வேகத்தைத் தக்கவைப்பதற்கானதும்கூட. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, பணம் கொடுக்காமல் அரசு வேலை வழங்கப்பட்டதா? ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தபால்காரர் மூலம் வீட்டுக்கு அப்பாயின்மென்ட் லெட்டர் வந்துவிடுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு பொய் இயந்திரம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தருவோம் என்கிறார்கள். ஹரியானாவில் நைப் சிங் சைனி ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக அரசு 24 பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும், தெலங்கானாவிலும் எத்தனை பயிர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது என்பதை ராகுல் காந்தியால் சொல்ல முடியுமா? MSPயின் முழு வடிவம் என்ன என்பதாவது ராகுல் காந்திக்கு தெரியுமா?

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, அது கமிஷன் மற்றும் ஊழலில்தான் இயங்கியது. வியாபாரிகள், தரகர்கள் மற்றும் மருமகன்கள் (ராபர்ட் வத்ரா) ஹரியானாவை ஆட்சி செய்தனர். பாஜக ஆட்சியில் வணிகர்கள், தரகர்கள், மருமகன்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.

இன்று நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பாக உள்ளது. இதில், ஹரியானா வீரர்களின் வீரமும் தியாகமும் அடங்கும். 40 ஆண்டுகளாக காங்கிரஸால் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை நமது ராணுவ வீரர்களுக்கு வழங்க முடியவில்லை. மோடி, ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினார்.

ஜம்மு - காஷ்மீரில் பிரச்சாரம் செய்யும்போது, சிறையில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் கல்வீச்சுக்காரர்களை விடுவிப்போம் என்று காங்கிரசும், தேசிய மாநாட்டுக் கட்சியும் சொல்கின்றன. ஜம்மு காஷ்மீரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஆனால், நமது ராணுவ வீரர்களைக் கொன்றவர்களைக் காப்பாற்றுவோம் என்று சொல்கிறார்கள். ராகுல் காந்திக்கு தைரியம் இருந்தால் அதை ஹரியானாவில் வந்து பேசட்டும்.

வெளிநாடு செல்லும் ராகுல் காந்தி, எஸ்டி-எஸ்சி-ஓபிசி சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று கூறுகிறார். அவரால் எவ்வாறு இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர முடியும். அரசாங்கம் நம்முடையது. நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்பி இருக்கும் வரை இடஒதுக்கீட்டை நிறுத்த முடியாது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று ராகுல் காந்தி கூறுகிறார். அவரால் மட்டுமல்ல, அவரது மூன்று தலைமுறையினர் முயன்றால் கூட 370 வது பிரிவை திரும்ப கொண்டு வர முடியாது" என தெரிவித்தார்.

x