மும்பை: மந்த்ராலயா கட்டிடத்தில் உள்ள மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் அலுவலகத்தை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடுமையாக சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மும்பை மந்த்ராலயாவில் மாநில அரசின் பெரும்பாலான துறைகளின் அலுவலகங்கள் உள்ளன. இந்த கட்டிடத்தில் பாதுகாவலர்களிடம் சிக்காமல் உள்ளே நுழைந்த பெண் ஒருவர், நேற்று மாலை ஆறாவது மாடியில் உள்ள துணை முதல்வர் பட்னாவிஸின் அலுவலகத்திற்குச் சென்றார்.
அங்கே திடீரென பட்னாவிஸுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அந்த பெண், துணை முதல்வரின் பெயர் பலகையை தரையில் வீசி சேதப்படுத்தியதுடன், அங்கே தொட்டிகளில் இருந்த செடிகள் தரையில் அடித்து நொறுக்கியுள்ளார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீஸார் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் தெற்கு முனை வாயில் வழியாக தப்பித்து சென்றுவிட்டார்.
விசாரணையில், அந்தப் பெண் தனது வீடு தொடர்பான பிரச்சினையால் அரசின் மீது கோவத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது மரைன் டிரைவ் பகுதி போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.