அங்கன்வாடி வேலைக்கு உருது கட்டாயம்: முதல்வர் சித்தராமையாவின் அறிவிப்பால் கொந்தளிக்கும் கர்நாடகா!


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இப்போது முதல்வர் சித்தராமையா தொடர்பான ஊழல் வழக்கு பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், உருது மொழி பிரச்சினையும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

கர்நாடகாவின் முடிகெரே மற்றும் சிக்கமகளூருவில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கு உருது மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்று புதிய உத்தரவை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் விதித்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது ஒரு தரப்பினரால் கர்நாடகத்தின் ஒருமைப்பாட்டை சேதப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர் விண்ணப்பதாரர்களுக்கு உருது மொழிப் புலமையை கட்டாயமாக்கும் மாநில அரசின் அறிவிப்பால் மற்ற மாவட்டங்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளன. முஸ்லீம் சமூகம் 31.94% வாழும் முடிகெரே மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களில் இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டது முதல் கடும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

அரசின் இந்த உத்தரவு பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக பாஜகவிடம் இருந்து கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. இது மாநிலத்தின் மொழி ஒற்றுமையை சீர்குலைக்கும் என்றும், ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மதத்தை சேர்ந்த மக்களுக்கு அதீத முன்னுரிமை, வேலைவாய்ப்பு கொடுக்கும் அவலத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இது காங்கிரஸின் “முஸ்லிம் திருப்திப்படுத்தும்" முயற்சி என்றும் பாஜக விமர்சித்துள்ளது.

சொந்த மாநிலத்தில் கன்னடம் பேசும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை மறுக்கும் மோசமான நடவடிக்கை இது என்று காங்கிரஸை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சமீபகாலமாக இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பை அந்த மாநிலம் பதிவு செய்து வரும் நிலையில், கன்னட மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருது மொழி திணிக்கப்படுவது அம்மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் கர்நாடகா நோக்கி செல்வது வழக்கம், குறிப்பாக பெங்களூர் போன்ற நகரங்களை நோக்கி பலர் குடியேறி வருகிறார்கள். இப்படி புலம்பெயர்ந்தவர்களில் பலர் இந்தி, தெலுங்கு, தமிழ் அல்லது மராத்தி பேசுகிறார்கள். இப்படி பல மொழிகள் கொண்ட மாநிலத்தில் திடீரென உருது திணிக்கப்படுவது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த ஆணை ஆபத்தான முன்னுதாரணமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அந்த வேலைக்கு நல்ல திறன் கொண்டவர்கள், அல்லது தகுதியுடையவர்கள் உருது மொழி தெரியாத காரணத்தால் வேலைக்கு சேர முடியாத நிலை ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே இந்த வேலையில் சேரும் சூழலும் ஏற்படும் என்று எதிர்க்கட்சியினர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் உள்ள கணிசமான முஸ்லிம் மக்கள்தொகையை மட்டும் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மற்ற சமூக மக்கள் இடையே அதிர்ச்சியை, விமர்சனங்களை சந்தித்துள்ளது.

அங்கன்வாடி பணியாளர்கள் என்பவர்கள் அரசு திட்டங்களுக்கும் உள்ளூர் சமூகத்திற்கும் இடையே மிகப்பெரிய இணைப்பு பாலமாக உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உள்ளூர் மொழியான கன்னடம் அவசியம். அப்படிப்பட்ட பணிக்கு உருது கட்டாயம் என்பது மிகப்பெரிய தவறான முடிவு. சிறுபான்மைச் சமூகங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்வது நோக்கமாக இருந்தாலும், அது மற்ற மக்களுக்கு பிரச்சனையாக மாறும் என்பதை கூட யோசிக்காமல் இந்த முடிவை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கர்நாடக வேலைவாய்ப்புகளில் கன்னட புலமை முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் பயன் அடையும் வகையில் உருதுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முடிவை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

கன்னடத்தை விட ஒரு சிறுபான்மை மொழிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், காங்கிரஸ் அரசாங்கம் அதன் பெரும்பான்மையான மக்களை அந்நியப்படுத்தும் முடிவை எடுத்து உள்ளது. இந்த முடிவு பிரிவினையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, ஆபத்தான விஷயமாகவும் மாறலாம் என பாஜக தரப்பு தனது கடுமையான எதிர்ப்பினை இந்த விவகாரத்தில் பதிவு செய்துள்ளது. பல தரப்பிலும் இந்த விவகாரத்தில் வெடித்திருக்கும் எதிர்ப்பினை கருத்தில் கொண்டு காங்கிரஸ் அரசாங்கம், தனது நிலைப்பாட்டை மாற்றுமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

x