வேலைவாய்ப்புக்கு முடிவு கட்டிவிட்டார் பிரதமர் மோடி: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு


கோப்புப்படம்

அசாந்த்: பிரதமர் மோடி திட்டமிட்டு வேலைவாய்ப்புக்கு முடிவு கட்டிவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியானா சட்டபேரவையின் 90 தொகுதிகளுக்கு அக். 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அசாந்த் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானா காங்கிரஸ் மாநிலத் தலைவர் உதைபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரச்சாரக் கூட்டத்தில்காங்கிரஸ் எம்பியும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசியதாவது: நான் சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, ஹரியானாவிலிருந்து புலம்பெயர்ந்து சென்று அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர்களில் சிலரை சந்தித்தேன். சொந்த மாநிலத்தில் வேலை கிடைக்காத காரணத்தால் நல்ல எதிர்காலம் தேடி தாங்கள் அமெரிக்கா செல்ல நேர்ந்ததாக அவர்கள் வருந்தினர். இந்த நிலைக்குக் காரணம், பாஜக அரசு ஹரியானா மாநிலத்தை நிர்மூலமாக்கிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு நாட்டில் வேலைவாய்ப்புகளை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார்.

2 லட்சம் பணியிடங்கள்: ஹரியானாவில் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், காங்கிரஸ் அரசு விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உரிமைத்தொகையும், காஸ் சிலிண்டர் ரூ.500-க்கும் உறுதியாக வழங்கப்படும். அக்.5-ம் தேதி நடைபெறும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்

x