அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.1,035 வரை உயர்வு: அக்.1 முதல் அமல்


புதுடெல்லி: கட்டுமானம், சுரங்கம், வேளாண் உள்ளிட்ட அமைப்புசாரா துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.1,035 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

மக்களின் அன்றாட செலவு அதிகரித்து வருகிற நிலையில், அதற்கேற்ற வகையில் ஊதியம் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. கட்டுமானம், சரக்குகளை ஏற்றுதல், இறக்குதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட திறனற்ற வேலைகளுக்கு தினசரி குறைந்தபட்ச ஊதியம் தற்போது ரூ.783 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தகைய வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு மாதம் ரூ. 20,358 வழங்கப்பட வேண்டும். பகுதியளவு திறன் தேவைப்படும் வேலைகளுக்கான தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.868 ஆகவும் (மாதம் ரூ.22,568), குமாஸ்தா, ஆயுதம் இல்லாமல் காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கான ஒருநாள் குறைந்தபட்ச ஊதியம் ரூ.954 ஆகவும் (மாதம் ரூ.24,804), அதிக திறன் தேவைப்படும் பணிகள் மற்றும் ஆயுதம் தாங்கி காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கான ஒருநாள் குறைந்தபட்ச ஊதியம் ரூ.1,035 ஆகவும் (மாதம் ரூ.26,910) உயர்த்தப்பட்டுள்ளது.

அகவிலைப்படி: பணவீக்கத்தின் அடிப்படையில் , மாறக்கூடிய அகவிலைப்படியை (விடிஏ) மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை மாற்றி அமைக்கிறது. அதன்படி தற்போது அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், குறைந்தபட்ச ஊதியம் உயர்ந்துள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முன்பு கடைசியாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. பூகோள, துறை வாரியான குறைந்தபட்ச ஊதிய உயர்வு பற்றிய முழு விவரங்கள் முதன்மை தொழிலாளர் ஆணைய (மத்திய) இணையதளத்தில் (clc.gov.in) இடம்பெற்றுள்ளது.

ஊதிய உயர்வுக் கோரியும் மத்திய அரசின் புதிய தொழிலாளர்கள் விதியை ரத்து செய்யக்கோரியும் சில தினங்களுக்கு முன்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில், தற்போது மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

x