பாட்னா: வடமாநிலங்களில் பிள்ளைகளின் நீண்ட ஆயுளுக்காக ஜீவித் புத்ரிகா என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக விரதம் இருந்து நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜீவித் புத்ரிகா பண்டிகை கடந்த 24, 25-ம் தேதிகளில் கொண்டாடப்பட்டது.
பிஹாரில் தற்போது பருவமழை தீவிரமடைந்து கங்கை, கோஸி உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த சூழலில் ஜீவித் புத்ரிகா பண்டிகையை ஒட்டி நீர்நிலைகளில் புனித நீராடிய பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவுரங்காபாத்தில் உள்ள நீர்நிலைகளில் நீராடிய 8 பேர் உயிரிழந்தனர். சப்ரா நகரில் கங்கை மற்றும் காக்ரா நதிகளில்புனித நீராடிய 5 பேர் உயிரிழந்தனர். ரோட்டாஸ் நகரில் 4, கைமூர், சிவான், மைதிஹரி பகுதிகளில் தலா 3 பேர் உயிரிழந்தனர். பேட்டையா, பெகுசராய் பகுதிகளில் தலா 2 பேர் உயிரிழந்தனர். இதேபோல பல்வேறு பகுதிகளில் உயிரிழப்புகள் நேரிட்டு உள்ளன.
இதுகுறித்து பிஹார் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஜீவித் புத்ரிகா பண்டிகையின்போது கங்கை உள்ளிட்ட நதிகள் மற்றும் நீர் நிலைகளில் புனித நீராடிய 37 சிறார்கள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு பிஹார் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.