மீண்டும் பரபரப்பு... மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க நாகாலாந்து குழு முடிவு!


தனி மாநிலம் கோரும் கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (இஎன்பிஓ)

கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (இஎன்பிஓ), தனி நிர்வாகம் அல்லது 6 மாவட்டங்கள் உள்ளடக்கிய தனி மாநிலம் கோரிக்கை விடுத்து வருகிறது. இதனை மத்திய அரசு நிறைவேற்றும் வரை, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.

தேர்தல் புறக்கணிப்பு

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதிதான் உள்ளது. இம்மாநிலத்தில் வரும் ஏப்ரல் 19-ல் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் நாகாலாந்தின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏழு, நாகா பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இஎன்பிஓ அமைப்பு, தனி தன்னாட்சி நிர்வாகம் அல்லது அங்குள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கி தனி மாநிலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாக இஎன்பிஓ அறிவித்தது. அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த உறுதியைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று தேர்தலில் வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து இபிஎன்ஓ அமைப்பின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், வடகிழக்கு ஆலோசகர் ஏ.கே. மிஸ்ரா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது.

நாகாலாந்து

அந்த குழுவினர், இபிஎன்ஓ-வின் தனி மாநில கோரிக்கையை ஆய்வு செய்ய நாகாலாந்துக்கு பலமுறை சென்று அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் வரை, தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என இபிஎன்ஓ மீண்டும் முடிவு செய்துள்ளது. அங்குள்ள துயென்சாங்கில் கடந்த வியாழக்கிழமை அன்று 20 எம்எல்ஏ-க்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இஎன்பிஓ தலைவர்கள் நீண்ட நேர ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் இபிஎன்ஓ கூறுகையில், வரும் 19ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். தேர்தலை புறக்கணிப்பதாக நாகாலாந்து குழு அறிவித்துள்ளதால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x