ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயிலிலும் நெய்யின் தரத்தை சோதனையிட முடிவு


புவனேஷ்வர்: ஒடிசா புரி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீப் பரல் என்பவர் ஜெகந்நாதர் கோயிலில் வழங்கப்படும் மகாபிரசாதத்தில் சேர்க்கப்படும் பொருட்கள் தரமானவையா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரி கோயில் துணை நிர்வாக அதிகாரியான மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஷங்கர் ஸ்வெயினிடம் அண்மையில் மனு அளித்தார்.

இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த புரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஷங்கர் ஸ்வெயின் இதுகுறித்து கூறியதாவது: 12-ம் நூற்றண்டைச் சேர்ந்த பழமையான ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயிலில் வழங்கப்படும் மகாபிரசாதத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, நெய் உள்ளிட்ட பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை சரியான முறையில் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நெய்யின் தரம் குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. என்றாலும், திருப்பதியின் லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் இந்த முடிவுக்கு ஒத்துழைத்துள்ளது. அரசுக்கு சொந்தமான ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஓஎம்பெட்) புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு நெய் சப்ளை செய்யும் பணியில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு, மற்ற நிறுவனங்களின் கலப்பட நெய் சன்னதிக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஓம்பெட் வழங்கும் நெய் வாங்கப்படுவதை கட்டாயமாக்கி கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. தற்போது, இந்த நெய்யின் மூலம்தான் மகாபிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் நெய் ரூ.700 என்ற விலையில் மாதம் ஒன்றுக்கு 6,000 லிட்டர் நெய் வாங்கப்படுகிறது. தர பரிசோதனையில் ஏதேனும் விதிமீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x