கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!


கோயில், மசூதிக்கு ஒரே பெயர் பலகை

சமய நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், திருவனந்தபுரத்தில் உள்ள கோயில் மற்றும் மசூதிக்கு ஒரே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கோயில், மசூதிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரே பெயர் பலகை

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ளது வெஞ்சரமூடு. இங்குள்ள மேலக்குட்டிமூடில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மற்றும் பரயில் மசூதி ஆகியவை உள்ளன. இந்நிலையில் இக்கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இங்குள்ள கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கோயிலுக்கு நுழையும் சாலையின் முகப்புப் பகுதியில் அடையாள பெயர் பலகை வைக்க கோயில் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் அங்கு ஏற்கெனவே, மசூதி சார்பில் வளைவு பெயர் பலகை நிறுவப்பட்டிருந்தது.

சமய நல்லிணக்கம்

இதனால் பெயர் பலகை வைப்பதில் கோயில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டனர். இதையடுத்து, மசூதி நிர்வாகத்தினர் பெயர் பலகையை கோயில் நிர்வாகத்துடன் பகிர்ந்துகொள்ள முன்வந்தனர். இதையடுத்து கோயிலின் பெயர் இடதுபுறத்திலும், மசூதியின் பெயர் வலதுபுறத்திலும் முறையே சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் எழுதப்பட்டுள்ளன. கோயில் பெயர் அமைந்துள்ள பகுதியில் 'ஓம்' என்றும், மசூதி பெயர் அமைந்துள்ள பகுதியில் நட்சத்திரம் மற்றும் பிறை சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.

கோயில் மற்றும் மசூதிக்கு ஒரே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது சமய நல்லிணக்கத்தை பறைசாற்றுவதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x