மருத்துவப் படிப்பு சேர்க்கையில் என்ஆர்ஐ ஒதுக்கீடு மோசடி: பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு


புதுடெல்லி: மருத்துவப் படிப்பு சேர்க்கையில் (எம்பிபிஎஸ்) வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) ஒதுக்கீடு என்பது மோசடிதான் என்று பஞ்சாப் மாநில அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது அவசியமாகும். இந்நிலையில், பல மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியருக்கான (என்ஆர்ஐ) ஒதுக்கீடு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இடங்களை விற்பனை செய்துவருவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின் கீழ் ஆயிரக்கணக்கான இடங்களை பலகல்லூரிகள் விற்பனை செய்துவருகின்றன. அரசுக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேரக்கை நடைபெறும்போது, கணிசமான இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு என்ற பெயரில் ஒதுக்கப்படுகின்றன. சில கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரிலும் என்ஆர்ஐ ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பஞ்சாப் மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில், என்ஆர்ஐ மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சேர்க்கை வரையறையை விரிவுபடுத்தி வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) உறவினர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர தகுதியுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த அறிவிப்பாணையை, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இது தவறான பயன்பாட்டுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தது.

இதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிராகரிப்பை எதிர்த்து பஞ்சாப் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பர்திவாலா ஆகியோர் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி சேர்க்கையின்போது என்ஆர்ஐ ஒதுக்கீட்டு முறை என்பது மோசடி தவிர வேறொன்றுமில்லை.

இந்தியாவில் உள்ள கல்விமுறையை நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எம்பிபிஎஸ் படிப்புக்கான சேர்க்கையின்போது என்ஆர்ஐயின் நெருங்கிய உறவினர்கள்தான் பரிசீலிக்கப்படுவார்கள் என்று நீங்கள் (பஞ்சாப் அரசு) கூறுகிறீர்கள். இது என்ன? அரசின் பணம் புரளும் தந்திரம்தான். இதைத் தவிர வேறொன்றுமில்லை. நாம் உடனடியாக இந்த என்ஆர்ஐ ஒதுக்கீட்டு விவகாரத்தைமுடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இது ஒரு முழுக்க முழுக்க மோசடியாகும்.

நீட் தேர்வில் 3 முறை அதிக மதிப்பெண் பெற்றும் மாணவர்கள் சிலர் மருத்துவப் படிப்புகளில் சேரமுடியாத நிலை உள்ளது. இதுபோன்ற அப்பட்டமான சட்டவிரோத செயலை இந்த நீதிமன்றம் அனுமதிக்காது. எனவே, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பஞ்சாப் அரசு செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

x