சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு சிக்கல்: உயர் நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!


பெங்களூரு: மூடா முறைகேடு வழக்கில் தமக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி கொடுத்ததற்கு எதிரான முதல்வர் சித்தராமையா மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.

க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து பார்வதியின் கோரிக்கைபடி, கடந்த ஆண்டு மைசூருவில் உள்ள விஜய நகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன‌. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விலை அதிகமுள்ள இடத்தை ஒதுக்கியிருப்பதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்அளித்தனர். முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தேவை என்பதால், சமூக ஆர்வலர்கள் மூவரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை தனித்தனியாக சந்தித்து புகார் அளித்தனர். அதில் முதல்வர் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினர்.

இதையடுத்து ஆளுநர், இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்குமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா, அமைச்சரவையைக் கூட்டி நோட்டீஸை திரும்ப பெற வலியுறுத்தினார். இதனையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

ஆளுநர் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி உத்தரவிட கோரி, உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா ரிட் மனு தாக்கல் செய்தார். இதன் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17 ஏ வின் கீழ், முதல்வர் மீது விசாரணை நடத்த ஆளுநர் அளித்த அனுமதி சரியாகவே உள்ளது என்று கூறி, சித்தராமையாவின் மனுவை நீதிபதி நாகபிரசன்னா தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தார்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை தொடர்ந்து சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

x