சிறார் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி: இளைஞர் ஒருவர் தனது போனில்சிறார்களின் ஆபாச படங்களைபதிவிறக்கம் செய்து பார்த்ததுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த நபருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கையை ரத்து செய்து விடுவித்தது.

இன்றைய சிறுவர்கள் ஆபாசபடங்களை பார்ப்பது தீவிரமானபிரச்சினையாக மாறி வருவதாகவும், அவர்களை தண்டிப்பதற்கு பதிலாக அதுகுறித்த கல்வியை போதிக்கும் அளவுக்கு சமூகம் முதிர்ச்சியடைய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிறார் நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சிறார்களின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்த வழக்கில் தீர்ப்பை வழங்குவதில் சென்னை உயர் நீதிமன்றம் மிகப்பெரிய தவறினை இழைத்துள்ளதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. இதையடுத்து போக்சோ சட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதுகுறித்து நீதிபதி பர்திவாலா வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது: குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்குவது மற்றும் பார்ப்பது என்பது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ்குற்றமாகும். குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க இந்த சட்டம் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். எனவே, குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசபடங்களை பதிவிறக்கம் செய்து சேமித்து வைப்பதற்கு தண்டனை வழங்கும் போக்சோ சட்டத்தின் 15-வது பிரிவின் கீழ் இந்த உத்தரவுகூடுதல் கவனத்தை செலுத்துகிறது.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசபடங்களை சேமித்து வைப்பது அல்லது அதுகுறித்து புகாரளிக்க தவறுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாயும், தொடர்ந்து அதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு பத்தாயிரம் ரூபாயும் அபாரதம் விதிக்கப்படும். சிறார்களின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதனைபரப்பினால் 7 ஆண்டுகள் வரைசிறை தண்டனை விதிக்க போக்சோசட்டப் பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றத்தின் உண்மையான பின்னணியை சரிபார்க்க வேண்டும். எனவே, இந்த வழக்கை மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும். இதன்மூலம், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. குழந்தைகள் பாதிக்கப்படுவது மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க போக்சோ சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றத்திடம் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளோம். இவ்வாறு நீதிபதி பர்திவாலா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்

x