> 6 வது கட்ட தேர்தல் தொடங்கியது: மக்களவைத் தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு 58 தொகுதிகளில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 25.76 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. டெல்லியில் 21.69 சதவீதமும், மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 36.88 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
> “உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்”: மக்களவைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நிர்மல் பவனில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வாக்களித்தனர். பின்னர் தனது தாயுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ராகுல் காந்தி அதனை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து “நானும், அம்மாவும் எங்கள் வாக்கை செலுத்தி மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவில் பங்களித்தோம். நீங்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வந்து உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என இந்தியில் பதிவிட்டிருந்தார்.
> சர்வாதிகாரத்துக்கு எதிராக வாக்களித்தேன்- கேஜ்ரிவால்: மக்களவைத் தேர்தலின் 6வது கட்ட வாக்குபதிவின் போது டெல்லியில் வாக்களித்தப் பின்னர் தனது கட்சி ஆதரவாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், " நான் இன்று எனது தந்தை மனைவியுடன் சென்று வாக்களித்தேன். "நான் சர்வாதிகாரம், பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக வாக்களித்தேன். நீங்களும் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்" என்று கூறினார்.
> விளம்பரங்களை வெளியிட தடை- பாஜக வழக்கு: மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்ற தனி நீதிபதி தீர்பை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதி தீர்ப்பில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து நேற்று பாஜக சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
> புனே கார் விபத்து வழக்கில் சிறுவனின் தாத்தா கைது: புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்க துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
> கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: கேரளாவில் கனமழை தொடரும் சூழலில் 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில் மே 19 தொடங்கி இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர்.
> போக்குவரத்து துறை vs காவல் துறை செயலர்கள் பேச்சுவார்த்தை: தமிழக போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
> மத்திய அரசு மீது கர்நாடக அமைச்சர் சாடல்: கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யவேண்டும் என்று மே 21ம் தேதி தான் மாநில அரசிடமிருந்து கோரிக்கை வந்தது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது குறித்து கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மத்திய அரசை சாடியுள்ளார்.
> தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்காக இதுவரை 3.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
> பாட்னா ஸ்மார்ட் சிட்டி எங்கே? - காங்., கேள்வி: பாட்னா ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக இன்று பாஜகவை சாடியுள்ள காங்கிரஸ் கட்சி, நமாமி கங்கா நிதி எங்கே காணமல் போனது, பாட்னா பல்கலைக்கழகத்துக்கு எந்த மத்திய பல்கலைக் கழக அந்தஸ்த்து வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.