மும்பை: தானும், தனது அண்ணன் மகனுமான அஜித் பவாரும் ஒரு குடும்பமாக ஒன்றாக இருக்கிறோம் என்றும், ஆனால் அவர் வேறு அரசியல் கட்சிக்கு தலைமை தாங்குகிறார் என்றும் தேசியவாத கட்சியின்(எஸ்பி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கடலோர கொங்கன் பிராந்தியத்தில் உள்ள சிப்லுனில் செய்தியாளர்களை சரத் பவார் சந்தித்தார். அப்போது, அஜித் பவாருடன் நீங்கள் மீண்டும் ஒன்றிணைவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, “நாங்கள் வீட்டில் ஒன்றாகவே இருக்கிறோம்” என்று கூறினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், அஜித் பவார், சரத் பவாரிடம் இருந்து பிரிந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்வராக இணைந்தார்.
அஜித் பவார் சமீபத்தில் அவரது மனைவி சுனேத்ரா பவாரை, மக்களவைத் தேர்தலில் சுப்ரியா சுலேவுக்கு எதிராக பாராமதியில் போட்டியிட வைத்தது தவறு என்று கூறியிருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த சரத் பவார், “அவர் வேறு கட்சியில் இருக்கிறார். வேறு கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும்? என்சிபி (எஸ்பி), காங்கிரஸ் மற்றும் சிவசேனா (யுபிடி) ஆகிய எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி(எம்விஏ) கூட்டணி வலுவாக உள்ளது. அது தனது முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வது தற்போது ஒரு அவசரப் பிரச்சினை என்று நான் நினைக்கவில்லை’ என்று கூறினார்
மேலும், "சமாஜ்வாதி கட்சி மற்றும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி போன்ற பிற கட்சிகளின் உதவியுடன் மகாராஷ்டிராவில் ஒரு முற்போக்கான ஆட்சியை வழங்குவதே எங்கள் கூட்டணியின் நோக்கம். எங்கள் அவதானிப்பு என்னவென்றால், மகாராஷ்டிரா மக்கள் அடுத்த தேர்தலில் எங்களுக்கு (எம்விஏ) ஒரு வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளனர்" என்று அவர் கூறினார்.