பாஜக விதிகள் மோடிக்கு ஏன் கடைபிடிக்கப்படவில்லை? - ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி


புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், கடந்த 13-ம்தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.அதைத் தொடர்ந்து, முதல்வர்பதவியை அவர் ராஜினாமாசெய்தார். அவருக்குப் பதிலாகஆதிஷி தற்போது டெல்லி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் கலந்துகொண்டார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவர் பங்கேற்ற முதல் பொதுக் கூட்டம் இது. அந்தக் கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திடம் ஐந்து கேள்விகளை கேஜ்ரிவால் முன்வைத்தார்.

“பாஜகவில் 75 வயதுக்குப் பிறகு பொறுப்பிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற விதி மூத்தத் தலைவர் எல் கே அத்வானிக்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனால், மோடிக்கு ஏன் இந்த விதி கடைபிடிக்கப்படவில்லை? மோடி எதிர்க்கட்சிகளை உடைத்து, அக்கட்சி உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்க்கிறார். இதற்கு அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை அவர் பயன்படுத்துகிறார். அவரது இந்த நடவடிக்கை சரியானதா? ஊழல்வாதிகள் என்று தான் குற்றம்சாட்டிய தலைவர்களை, இப்போது அரசியல் லாபத்துக்காக மோடி தன் கட்சியில் சேர்த்து வருகிறார். மோடியின் இந்த அரசியலுடன் ஆர்எஸ்எஸ் உடன்படுகிறதா?

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாஜகவுக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று கூறியது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு என்ன நினைக்கிறது? ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து உருவான கட்சிதான் பாஜக. பாஜகவின் தவறுகளை என்றாவது ஆர்எஸ்எஸ் தடுத்து இருக்கிறதா?” என்று அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார். தன்னுடைய ராஜினாமா குறித்து அவர் பேசுகையில், “என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்னைக் காயப்படுத்தின. அதன் காரணமாகவே நான் ராஜினாமா செய்தேன். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நான் மக்களிடம் மரியாதையைத்தான் சம்பாதித்து உள்ளேன். பணத்தை அல்ல. வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் எனக்கு அக்னி பரீட்சை. நான் நேர்மையற்றவன் என்று மக்கள் கருதினால் எனக்கு வாக்களிக்க வேண்டாம்” என்று அவர் தெரிவித்தார்

x