அடுத்த மூன்று மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவான தீவிர புயலான மிக்ஜாம், தமிழ்நாட்டை ஒட்டிச் சென்றதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழையை கொட்டித் தீர்த்தது.
இதையடுத்து, ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
புயல் கரையை கடந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு பிறகு வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் வசதி இன்றி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களான, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.