மகளின் கிட்னியை எடுத்துக் கொண்டு தேர்தலில் டிக்கெட்... லாலு மீது பாஜக பாய்ச்சல்!


தந்தை லாலு பிரசாத் யாதவுடன், ரோஹிணி ஆச்சார்யா

லாலுபிரசாத் யாதவ், தேர்தல் சீட்டுகளை விற்றுவருவதாகவும், இதில் தனது மகளையும் விட்டு வைக்காமல், கிட்னியை பெற்றுக் கொண்டு சீட் வழங்கியுள்ளதாகவும் பீகார் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமானவர் லாலு பிரசாத் யாதவ் (75). இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2022 இறுதியில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது லாலு பிரசாத் யாதவுக்கு அவரது மகள் ரேஹிணி ஆச்சார்யா, தனது கிட்னியை தானம் செய்தார். ரேஹிணி ஆச்சார்யாவின் இந்த செயலுக்கு அந்த சமயத்தில் பலரும் வெகுவான பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் ரோஹிணி ஆச்சார்யா சரண் மக்களவைத் தொகுதியில் ஆர்ஜேடி சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் லாலுபிரசாத் யாதவ், தேர்தல் சீட்டுகளை விற்று வருவதாகவும், இதில் தனது மகளையும் விட்டுவைக்காமல், கிட்னியை பெற்றுக் கொண்டு சீட் வழங்கியுள்ளதாகவும் அம்மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பீகார் பாஜக தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி, “தேர்தல் டிக்கெட்களை விற்பனை செய்யும் அரசியல்வாதிகளில் லாலு ஒரு நிபுணர். அவர் தனது மகளைக் கூட விட்டுவைக்கவில்லை. முதலில், அவரிடமிருந்து ஒரு சிறுநீரகத்தை பெற்றுக்கொண்டு, பின்னர் மக்களவை தேர்தல் டிக்கெட் வழங்கியுள்ளார்” என்றார்.

இந்நிலையில் சாம்ராட் சவுத்ரியின் இந்த விமர்சனத்துக்கு லாலுவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் லாலுவின் மகள். கீழ்த்தரமான நபர்களின் ஒவ்வொரு கீழ்த்தரமான எண்ணங்களுக்கும், கீழ்த்தரமான வார்த்தைகளுக்கும் மக்கள் நீதிமன்றத்தில் பதிலளிப்பேன்.

என் தந்தைக்கு எனது சிறுநீரகத்தில் ஒன்றை வழங்குவது எனது கடமையும் அன்பும் ஆகும். ரோஹிணி தனது குடும்பத்துக்காகவும், தனது பிறப்பிடமான பீகாருக்காகவும் தனது உயிரை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாள்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தஞ்சையில் வீதி, வீதியாக நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு... ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

x