‘கேஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்குவோம்’ - டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற அதிஷி சூளுரை!


புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவோம் என்று டெல்லி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அதிஷி தனது முதல் உரையில் சூளுரைத்துள்ளார்

டெல்லி முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக உரையாற்றிய அதிஷி, “இன்று நான் முதல்வராக பதவியேற்றுள்ளேன். ஆனால் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இல்லாதபோது இது எங்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். கேஜ்ரிவால் டெல்லி மக்களின் வாழ்க்கையை மாற்றினார். அரவிந்த் கேஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக உருவாக்க நாம் அனைவரும் இப்போது வேலை செய்ய வேண்டும்.

நேர்மை மற்றும் உண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கேஜ்ரிவால், ‘நீதிமன்ற தீர்ப்பு மட்டும் போதாது. நான் மக்கள் நீதிமன்றத்திற்கு செல்வேன், நான் நேர்மையானவன் என்று டெல்லி மக்கள் அறிவிக்கும் வரை முதல்வர் இருக்கைக்கு திரும்ப மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்” என்று உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார்.

டெல்லியின் 8வது முதல்வராக அதிஷி இன்று ராஜ் நிவாஸில் பதவியேற்றார். மதுபானக் கொள்கை வழக்கில் இந்த வார தொடக்கத்தில் ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து இன்று அதிஷி முதல்வராகியுள்ளார்.

அதிஷியுடன் முந்தைய அமைச்சரவையிலிருந்து நான்கு பேர் மற்றும் ஒரு புதிய முகம் என அவருடன் ஐந்து கேபினட் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஆம் ஆத்மியால் அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சர்கள் குழுவில் கோபால் ராய், கைலாஷ் கெலோட், சவுரப் பரத்வாஜ், இம்ரான் ஹுசைன் மற்றும் புதிய அமைச்சர் முகேஷ் அஹ்லாவத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

x