திடீர் திருப்பம்...உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேஜ்ரிவால் திரும்பப் பெற்றார்!


உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறை, அர்விந்த் கேஜ்ரிவால்

அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அர்விந்த் கேஜ்ரிவால் இன்று திரும்பப் பெற்றுள்ளார்.

அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அம்மாநில கலால் கொள்கை தொடர்புடைய முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். நேற்று இரவு முழுவதும் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

முன்னதாக, இந்த வழக்கில் கைது நடவடிக்கைகளில் இருந்து கேஜ்ரிவாலுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதால் அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வை அணுகுமாறு இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தினார். அதன்பின்னர் இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சஞ்சீவ் கன்னா, பேலா எம்.திரிவேதி

அப்போது, அபிஷேக் மனு சிங்வி, நீதிபதிகளிடம் கூறுகையில், “விசாரணை நீதிமன்றத்தின் முன் ரிமாண்ட் நடவடிக்கைகள் இருப்பதால், இந்த மனுவை இங்கே திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். நாங்கள் ரிமாண்ட் நடவடிக்கைக்கு எதிராக போராடுவோம். பின்னர், இந்த நீதிபரிபாலனத்துக்கு திரும்பி வரலாம். இதுதொடர்பாக நான் பதிவாளரிடம் ஒரு கடிதத்தை அளிக்கிறேன்” என தெரிவித்தார்.

இதே வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வரும், கே.சந்திரசேகர் ராவ் மகளுமான கவிதாவும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கவிதா, அர்விந்த் கேஜ்ரிவால்

அந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வுதான் விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "மனுதாரர் ஒரு அரசியல்வாதியாக இருப்பதாலோ அல்லது நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு வர முடியும் என்பதாலோ ஜாமீன் மனுவை நேரடியாக விசாரிக்க முடியாது. மனுதாரர் முதலில் விசாரணை நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள்" என அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து கவிதா, தனது மனுவை உச்ச நீதிமன்றத்தில் திரும்பப் பெற்றார்.

அதே வழிமுறை கேஜ்ரிவாலுக்கும் பொருந்தும் என்பதால், தற்போது கேஜ்ரிவால் ஆஜர்படுத்தப்படும் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். எனவே, அங்கு கிடைக்கும் முடிவுகளைப் பொருத்து பின்னர் உயர் நீதிமன்றத்துக்கு மீண்டும் வருவதாக கேஜ்ரிவால் வழக்கறிஞர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

x