போலியாக ரத்ததானம் செய்த பாஜக மேயர்: வைரலாகும் பிரதமரின் பிறந்தநாள் நிகழ்ச்சி வீடியோ!


உத்தரப்பிரதேசம்: மொராதாபாத் மேயரும், பாஜக மூத்த தலைவருமான வினோத் அகர்வால், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வின் போது, ​​ரத்ததானம் செய்வதாக போலியாக நடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மொராதாபாத்தில் செப்டம்பர் 17ம் தேதி பா.ஜ.க.வின் இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் இரத்தம் கொடுப்பதுபோல போலியாக செயல்பட்ட மேயர் வினோத் அகர்வாலின் செயல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், இரத்த தான முகாமில் மேயர் படுக்கையில் படுத்திருகிறார். ஒரு சுகாதார ஊழியர் அவரது இரத்த அழுத்தத்தை சரிபார்க்க தயாராகிறார். இருப்பினும், வினோத் இந்த செயல்முறையை தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். துணை மருத்துவர் ஊசியை வெளியே எடுக்கும்போது, ​​மேயர் உடனடியாக படுக்கையில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறினார்.

இந்த வீடியோ வைரலானவுடன், சமூக ஊடகங்களில் வினோத் அகர்வால் கேமராவுக்காக போலியாக இரத்த தானம் செய்ததாக விமர்சித்தனர்.

இந்த சர்ச்சை குறித்து பேசிய வினோத் அகர்வால், “​​​​இது என்னை அவதூறு செய்ய நடத்தப்பட்ட சதி. செப்டம்பர் 17ல் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. நானும் ரத்த தானம் செய்ய விருப்பம் தெரிவித்தேன். அதனால், ரத்தம் எடுக்கும் முன் மருத்துவர் என்னிடம் ஏதாவது நோய் இருக்கிறதா என்று கேட்டார். எனக்கு நீரிழிவு நோய் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதயப் பிரச்சனை இருந்ததை சொன்னேன். அதனால் நான் இரத்த தானம் செய்ய முடியாது என்று கூறினார்" என்று அவர் கூறினார்.

x