இந்திய பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 1,300 புள்ளி உயர்வு


மும்பை: அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து ஆசிய மற்றும் சர்வதேச பங்குச் சந்தைகளில் நேர்மறையான தாக்கம் காணப்பட்டது.

குறிப்பாக, இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் 1,360 புள்ளிகள் அதாவது 1.63 சதவீதம் உயர்ந்து 84,544 புள்ளிகளை எட்டியது. நிப்டி 375 புள்ளிகள் அதாவது 1.48 சதவீதம் ஏற்றம் கண்டு 25,790 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக் கும் மேல் உயர்ந்து 84,500 புள்ளிகளை கடந்தது இதுவே முதல்முறை. அதேபோன்று, நிஃப்டியும் 25,800 என்ற அளவை தாண்டியதும் இதுதான் முதல் முறை.

பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகம் முழுவதும் காளையின் ஆதிக்கம் காணப்பட்டதால் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் ரூ.5.6 லட்சம் கோடி அதிகரித்து ரூ.471 லட்சம் கோடியைத் தொட்டது. தங்க கடன் வர்த்தகத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியதையடுத்து, ஐஐஎஃப்எல் பைனான்ஸ் 12 சதவீதம் அதிகரித்தது. அதேநேரம், வோடபோன் ஐடியா பங்குகளின் விலை தொடர்ச்சியாக சரிந்து, 3 சதவீதம் என்றளவில் குறைவாக வர்த்தகம் ஆனது. ஐடி பங்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்சியடைய முடியாமல் குறைந்த விலைக்கே கைமாறின

x