ராகுல் காந்திக்கு எதிராக போராட பாஜக என்னை வற்புறுத்தியது - அம்பேத்கரின் கொள்ளுப் பேரன் பரபரப்பு குற்றச்சாட்டு


மும்பை: இடஒதுக்கீடு குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராகப் பேசவும், போராட்டம் நடத்தவும் பாரதிய ஜனதா கட்சி தன்னை அணுகியதாக அம்பேத்கரின் கொள்ளுப் பேரன் ராஜ்ரத்னா அம்பேத்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பேசும் ராஜ்ரத்னா அம்பேத்கர், “ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், தர்ணா நடத்தவும், நாட்டின் மிகப்பெரிய கட்சி என்னை அணுகியது. இரண்டு நாட்களாக எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது, ஆனால் நான் எந்த போராட்டமும் நடத்தவில்லை, நான் அதை செய்யப் போவதில்லை.

நான் எனது இயக்கத்தை சமுதாயத்தின் பணத்தில் இருந்து நடத்துகிறேன், எனவே சமூகம் மட்டுமே எனக்கு ஏதாவது செய்ய உத்தரவு கொடுக்க முடியும். பாஜக என்னை எதுவும் செய்ய உத்தரவிட முடியாது, அவர்களின் உத்தரவுக்கு பணிந்து நான் எந்த போராட்டமும் நடத்த மாட்டேன் ”என்று ராஜ்ரத்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும், ராகுல் காந்தியின் கருத்துகளை ஆதரித்த ராஜ்ரத்னா, “யார் சரியான அம்பேத்கரியராக இருந்தாலும், அவர்களுக்கு ராகுல் காந்தியின் கருத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்குமா?. உண்மையில், இந்த கருத்தில்தான் நாங்கள் நிற்கிறோம். சமூக பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும். நாங்களும் ரிசர்வேசனில் இருந்து வெளியேற விரும்புகிறோம். நாங்களும் பட்டியலில் இருந்து வெளியேற விரும்புகிறோம். ஆனால் இது வெளியேறுவதற்கான நேரமா?. இதைத்தான் ராகுல் காந்தி கூறியுள்ளார்” என்று அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

“நான் ராகுல் காந்தியின் ஆதரவாளரும் அல்ல, காங்கிரஸ் ஆதரவாளரும் அல்ல. ஆனால் இந்த தலைப்பில் நாம் ஏன் ராகுல் காந்தியை எதிர்க்க வேண்டும்?. என்னைப் பொறுத்தவரை காங்கிரஸும், பாஜகவும் ஒன்றுதான். ஆனால், எந்த அடிப்படையில் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று ராஜ்ரத்னா கூறினார்.

இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘அவர் பாபாசாகேப்பின் கொள்ளுப் பேரன், டாக்டர் ராஜ்ரத்னா அம்பேத்கர். இடஒதுக்கீட்டிற்கு எதிரான குழப்பத்தைப் பரப்ப பாஜக அவர்களுக்கு எப்படி அழுத்தம் கொடுத்தது என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். ஆனால் உண்மையான அம்பேத்கரியவாதியான அவர், ராகுல் ஜியின் அறிக்கையில் எந்த தவறும் காணவில்லை. 50% இடஒதுக்கீடு வரம்பை ராகுல் ஜி முடித்து வைப்பார்’ என்று தெரிவித்துள்ளார்

x