தடுப்பூசிக்கு எதிராக தாறுமாறு பிரச்சாரம்... பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!


பாபா ராம்தேவ்

நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்காத பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவும் பாபா ராம்தேவும் அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

யோகா குருவான பாபா ராம்தேவ், தனது பதஞ்சலி நிறுவத்தின் மூலம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு, மற்றும் ஆயுர்வேத மருந்துப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்த பொருட்களை விளம்பரம் செய்யும்போது தீராத நோய்களை குணப்படுத்துவதாகவும், அலோபதி மருந்துக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தார் ராம்தேவ்.

இதனை எதிர்த்து கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ”தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது, மீறினால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்” என்று நீதிபதிகள் பாபா ராம்தேவை எச்சரித்தனர். மேலும், இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்த திட்டம் தயாரிக்கவும் மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கினர்.

இந்த நிலையில், தடுப்பூசி மற்றும் சமகால மருத்துவ நடைமுறைகளுக்கு எதிராக பாபா ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் தவறான விளம்பரங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறினால் அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை கொடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் பதில் கொடுக்கவில்லை. எனவே, நீதிமன்ற நோட்டீசுக்கு பதிலளிக்காத ஆச்சார்யா பால்கிருஷ்ணாவும் பாபா ராம்தேவும் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

x