லெபனான் பேஜர்கள் வெடிப்பு பின்புலம் முதல் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 


லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புத் தாக்குதல்: லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த ‘டிவைஸ் வெடிப்புத் தாக்குதல்’ சம்பவங்களில் இதுவரை 32 பேர் உயிரிழந்தனர்; ஏறத்தாழ 3,000 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சதிச் செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத் துறை சார்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கமும் வழங்கப்படவில்லை. அதேவேளையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோயாவ் காலண்ட் “யுத்தத்தில் ஒரு புதிய கட்டம்” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்பு தாக்குதல் நடந்தது எப்படி? - செவ்வாய்க்கிழமை மாலை லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் ஒரே நேரத்தில் திடீரென வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. நகரின் முக்கிய சாலைகள், மார்க்கெட்டுகள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் வெடித்தன.

பேஜரில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பினர் வெடிக்கும் போர்ட் என்ற சாதனத்தை பொருத்தியுள்ளனர். அதில், 3 கிராம் அளவுக்கு வெடிமருந்தை நிரப்பியுள்ளனர். பேஜர்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே இந்த வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது. பேஜரில் கடவுச்சொல் வந்தவுடன் வெடிக்கும் வகையிலான சாதனமாகும் இது. 5,000 பேஜர்களில் இந்த சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணிக்கு குறிப்பிட்ட கடவுச்சொல் பேஜரின் திரையில் வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக சூடான பேஜர்கள் அடுத்த சில வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளன. இதே முறைதான் வாக்கி-டாக்கி வெடிப்புச் சம்பவங்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

செல்போனுக்கு பதிலாக பேஜர் ஏன்? - ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் அமைப்பின் தகவல் பரிமாற்றம் சாதனங்கள் பற்றிய விவரத்தை இஸ்ரேல் நன்கு அறிந்து வைத்துள்ளது. இதனால்தான் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர்களை மட்டுமே பயன்படுத்தி தகவல்களை பரிமாறி வந்தனர். இந்த வகை பேஜர்கள் செய்திகளைப் பெறுவதற்கு மட்டுமே பயன்படும். செல்போன்கள் மூலம் தகவல்களைப் பரிமாறினால் இஸ்ரேல் எளிதில் உளவு பார்த்து தகவல்களை இடைமறி்த்துப் பெறலாம் என்பதால் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அவர்களது வழியிலேயே சென்று அவர்கள் பயன்படுத்திய பேஜர்களிலேயே வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்துள்ளனர்.

இஸ்ரேல் - லெபனான் மோதல் ஏன்? - இஸ்ரேல் - லெபனான் மோதல் என்பது நீண்ட வரலாறு கொண்டது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், ஈரானின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில்தான் இந்தப் புது ரகமான தாக்குதல்கள் அரங்கேறப்பட்டுள்ளது.

பிஹாரில் பட்டியலின மக்களின் 21 குடிசைகள் தீ வைத்து அழிப்பு: பிஹார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் பட்டியலின மக்களின் குடியிருப்புப் பகுதியில் 21 குடிசைகள் தீ வைத்து நாசமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநிலத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கொடூரச் சம்பவம், பிஹாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

முஃபாசில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஞ்ஹி தோலா பகுதியில் புதன்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட இந்த தீவைப்பு சம்பவம், நிலத் தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாக பிஹார் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "பிஹாரில் வீடுகள், உடமைகளையும் இழந்த தலித் குடும்பங்களின் அழுகுரல்களும், கொடூரமான துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியால் ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமும் உறங்கிக் கொண்டிருக்கும் பிஹார் அரசை தட்டி எழுப்பவில்லை. மேலும், பிரதமர் மோடியின் மவுனம் இந்த மிகப் பெரிய அநீதிக்கு ஒப்புதல் அளிப்பதுபோல உள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக மீது தமிழிசை கடும் விமர்சனம்: “திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-ம் ஆண்டு விழாவின்போது அவரது மகன் தலைமை என திமுக தொண்டர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கருணாநிதி குடும்பம் பிழைத்துக் கொண்டே இருக்கும்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் பெண் சடலம் மீட்பு: சென்னை மணலியைச் சேர்ந்த திருமணம் ஆகாத இளம் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து சாலையில் வீசிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார், ஒருவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ராஸ் ரேஸ் கிளப் வழக்க்கில் அரசு பதிலளிக்க உத்தரவு: மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலத்துக்கான குத்தகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் செப்டம்பர் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதார், ரேஷன் கார்டு வழங்க அவகாசம்: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி: கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றை வழங்க 3 மாதம் அவகாசம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் - தமிழக தலைவர்கள் எதிர்ப்பு: “ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது.

ஒன்றிய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

x