ஆந்திரப் பிரதேச வெள்ள நிவாரணம்: ரூ.25 கோடி வழங்கியது அதானி குழுமம்!


புதுடெல்லி: ஆந்திராவில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அதானி குழுமம் ரூ.25 கோடி நன்கொடை அளித்துள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆந்திர மாநிலம் இந்த மாத தொடக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பெரும் சேதத்தால் ஆந்திரப்பிரதேசம் கவலையில் ஆழ்ந்துள்ளது. அதானி குழுமம் ஆந்திரப் பிரதேச மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. இதற்காக அதானி அறக்கட்டளை 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கரண் அதானி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ரூ.25 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

ஆந்திராவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் வெள்ளம் காரணமாக மாநிலத்தில் 6.44 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.14 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களும் சேதமடைந்துள்ளன.

x