இறந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை கணவர் கொண்டாடியதைப் பார்த்து உறவினர்கள் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சந்திரசேகர்-சுமா ஆகியோருக்கு திருமணமாகி 25 ஆண்டுகளான நிலையில் கடந்த மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமா இறந்து விட்டார்.
இந்த நிலையில் சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையைத் தயாரித்து அந்த சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவைச் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அதன்படி அவரது மனைவி சுமாவின் முழு உருவ மெழுகுச்சிலையை தயாரித்தார். சொந்த, பந்தங்கள் அனைவரையும் அழைத்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் தனது வெள்ளி விழா திருமண ஆண்டை கொண்டாட தடபுடலாக ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த விழாவில் இறந்த மனைவி சுமாவின் மெழுகுச் சிலையை வைத்திருந்தார். மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த சிலையைப் பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியமடைந்தனர். இறந்த சுமாவே நேரில் வந்து விட்டதாக கருதினர். பின்னர் தான் அது மெழுகுச்சிலை என்று தெரியவந்தது. மேலும் சந்திரசேகர் தனது மனைவியின் மெழுகுச் சிலையுடன் நிற்க, அருகில் 2 மகள்களும் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இறந்த மனைவியின் மெழுகுச் சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவைக் கணவர் கொண்டாடிய சம்பவம் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...