உத்தரப் பிரதேசத்தில் காரை ஹெலிகாப்டர் வடிவத்துக்கு மாற்றிய சகோதரர்கள், அதற்கு பெயின்ட் அடிக்க ஓட்டிச் சென்றபோது போலீஸார் பறிமுதல் செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகரில் உள்ள பீட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதி கஜூரி பஜார். இப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், 'மாருதி வேகன் ஆர்' காரை, ஹெலிகாப்டர் வடிவத்துக்கு மாற்றினர்.
இவர்கள் பிரத்யேகமாக உருவாக்கிய 'ஹெலிகாப்டர் கார்' வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்ட பலரும் அந்த சகோதரர்களை பாராட்டிய நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அக்பர்பூர் கோட்வாலி பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த பிரத்யேகமான ஹெலிகாப்டர் காருக்கு பெயின்ட் அடிப்பதற்காக சாலையில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வித்தியாசமான தோற்றத்தில் வாகனம் ஒன்று வருவதை கண்ட போலீஸார் வியப்படைந்தனர்.
அந்த பகுதியில் இருந்த மக்களும் இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு வியப்படைந்தனர். இந்நிலையில், அந்த ஹெலிகாப்டர் காரை சோதனை செய்ய வேண்டும் என போலீஸார் வழிமறித்தனர். சோதனைக்குப் பின்னர் ஹெலிகாப்டர் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் அதனை வடிவமைத்த சகோதரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், திருமணத்துக்கு மணமகளை ஹெலிகாப்டரில் அழைத்து வர வேண்டும் என்பது பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. ஆனால், பட்ஜெட் காரணமாக அதை செய்ய இயலவில்லை. எனவே, காரை ஹெலிகாப்டர் போன்று வடிவமைத்து மணமக்களை அழைத்து வர வாடகைக்கு விடும் நோக்கில் காரை ஹெலிகாப்டர் தோற்றத்துக்கு மாற்றியதாக தெரிவித்தனர்.
போலீஸார் ஹெலிகாப்டர் காரை பறிமுதல் செய்தாலும் அந்த சகோதரர்களின் முயற்சிக்கு ஏராளமானோர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.