சாதிவாரி கணக்கெடுப்பு, எம்எஸ்பி.க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்: ஹரியானாவில் காங்கிரஸ் வாக்குறுதி


புதுடெல்லி: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஹரியானாவுக்கு 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கூறியதாவது:

ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளான் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்குவோம். காஸ் சிலிண்டர்களுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். முதியோர், ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு ரூ.6,000 ஓய்வூதியம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 2 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவோம். இவ்வாறு கார்கே கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பான் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்

x