புதுடெல்லி: ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் 1,643 கி.மீ இந்தியா-மியான்மர் எல்லை முழுவதும் ரூ.31,000 கோடி செலவில் தடுப்பு வேலியை மத்திய அரசு அமைக்கவுள்ளது.
இந்தியா - மணிப்பூர் எல்லையில் 30 கிலோமீட்டர் தூரத்தில் வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இது மணிப்பூரில் இனக்கலவரத்திற்கு மூல காரணம் என்றும் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
இந்த நிலையில், இந்தியா மற்றும் மியான்மர் இடையே 1,643 கிமீ சர்வதேச எல்லையில் சுமார் ரூ. 31,000 கோடி செலவில் எல்லை வேலி மற்றும் சாலைகள் அமைக்க பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கொள்கை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோரே அருகே சுமார் 10 கிமீ வேலி அமைக்கும் பணி ஏற்கெனவே முடிவடைந்துள்ளது. மேலும் மணிப்பூரின் மற்ற பகுதிகளில் 21 கிமீ எல்லையில் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியா-மியான்மர் எல்லை மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக செல்கிறது.
எல்லைக்கு அருகில் வசிப்பவர்கள் எந்த ஆவணமும் இல்லாமல் 16 கி.மீ தூரம் பரஸ்பர எல்லைக்குள் செல்ல அனுமதிக்கும் இந்தியா-மியான்மர் சுதந்திர அனுமதியை (FMR) மத்திய அரசு ஏற்கெனவே ரத்து செய்துள்ளது. இது இந்தியாவின் கிழக்குக் கொள்கையின் ஒரு பகுதியாக 2018 இல் செயல்படுத்தப்பட்டது.