ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா அறிமுகம்!


புதுடெல்லி: ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான மசோதா, வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கை மத்திய அமைச்சரவையின் முன் வைக்கப்பட்ட நிலையில், இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையடுத்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு ஏராளமான கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கு ஒரு அமலாக்கக் குழு அமைக்கப்படும்" என்று கூறினார்.

மக்களவைத் தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு ராம்நாத் கோவிந்த் தலைமையில் பிரதமர் மோடி அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை இந்த ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.

18,626 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு, அரசியலமைப்பு திருத்தத்திற்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை.

அடுத்த கட்டமாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களுடன், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டும். பொதுத் தேர்தல் முடிந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் வகையில் இது மேற்கொள்ளப்படும். எவ்வாறாயினும், இதற்கு குறைந்தது பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வருவதற்கு 18 அரசியலமைப்பு திருத்தங்களை அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

x