வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சாலைகளிலும் நீர் ஆங்காங்கு தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரப்போகிறது. வரும் 2-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 3-ம் தேதி வங்கக்கடலிலேயே புயலாக வலுப்பெறும் என சொல்லப்பட்டுள்ளது.
தற்போது புயல் சின்னம் சென்னையிலிருந்து 800 கிமீ தொலைவில் புதுச்சேரியில் 790 கி.மீ கிழக்கே மையம் கொண்டுள்ளது.
சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் (தெற்கு ஆந்திரா) இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 4 -ம் தேதி மாலை இந்த புயல் கரையைக் கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதில் சென்னை, கடலூர், நாகப்பட்டிணம் துறைமுகங்களில் 1 மற்றும் 4-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மற்ற துறைமுகங்களில் 1-ம் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு – புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது. பலமான காற்று வீசுகிறது. ஆனால், துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அர்த்தம்
அதேபோல துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டிருந்தால் அதனை அறிவிக்கும் வகையில் 4-ம் எச்சரிக்கை எண் விடப்படும். துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களுக்கு ஆபத்து என்பதை தெரியப்படுத்த இது உதவும் என்பது பொருள்.