100 நாட்களில் விவசாயிகளுக்கு சாதகமான பல திட்டங்கள் அமல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்


புதுடெல்லி: பதவியேற்ற முதல் 100 நாட்களில் விவசாயிகளுக்கு சாதகமான பல திட்டங்கள், கொள்கைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சியின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், பல்வேறு மத்திய அமைச்சகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் மைல்கல் சாதனைகளை எடுத்துச் சொல்லும் வகையிலான கையேட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நேற்று டெல்லியில் வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: பிரதமர் மோடியின் பிறந்த நாளை பல்வேறு நிறுவனங்கள் ‘சேவை பக்வடா’என்ற பெயரில் கொண்டாட முடிவு செய்துள்ளன. செப்டம்பர் 17 (நேற்று) முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை எங்கள் கட்சித் தொண்டர்கள் மக்களுக்கு உதவுவார்கள்.

15 நாடுகள் மரியாதை: ஏழைக் குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக மாறியிருக்கிறார். உலகின் 15 வெவ்வேறு நாடுகள் தங்கள் நாடுகளின் உயரிய மரியாதையை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளன. அவரது நீண்ட ஆயுளுக்காக 140 கோடி இந்தியர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மோடிஅரசு, நாட்டின் உள் மற்றும் வெளிபாதுகாப்பினை பலப்படுத்தி வலிமையான இந்தியாவைஉருவாக்குவதில் வெற்றி பெற் றுள்ளது.

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது என்பதை நான் பெருமையுடன் கூற முடியும்.நமது டிஜிட்டல் பிரச்சாரத்தை புரிந்துகொண்டு அதனை தங்களின் நாடுகளின் வளர்ச்சிக்கான அடிப்படையாக மாற்ற பல நாடுகள் விரும்புகின்றன. நாங்கள் ஒழுக்கத்தை கொண்டு வந்து பொருளாதாரத்தின் 13 அளவுகோள்களில் வளர்ச்சியைக் கொண்டுவந்தோம்.

மூன்றாவது முறையாக பதவியேற்ற முதல் 100 நாட்களில் விவசாயிகளுக்கு சாதகமான பல்வேறு கொள்கைகள், திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகப்படுத்துதல் என்ற இலக்கை தற்போது மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அடுத்த தேர்தலுக்குள் இந்தியாவில் சொந்த வீடில்லாமல் யாரும்இருக்கக்கூடாது என்பதே எங்களின் இலக்கு.

விவசாயத் துறையில் புதுமையை புகுத்தும் நோக்கில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், கிராமப்புற நிறுவனங்களை உருவாக்குவதற்காக விவசாய நிதி உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட ரூ.14,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சம் கோடி: பிஎம்-கிஸான் நிதித் திட்டத்தின் கீழ் கடந்த 3 மாதத்தில் 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 12.33 கோடி விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கோடியை பாஜக அரசின் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

விவசாய சமூகத்தின் நலன் மற்றும் செழிப்பை கருத்தில் கொண்டு விவசாயக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது நாட்டின் உணவு தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும். இதன் மூலம் விவசாயிகளின் நிலை மேம்படும். 2024-25-ம் ஆண்டு காரிப் பருவத்தின்போது விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு நியாய விலை கிடைக்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இந்தத் தொகை, குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பயன்படுத்தப்படும்.

மேலும், கோதுமை தானியத்தை சேகரித்து வைக்க நாடு முழுவதும் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும். தற்போதுள்ள சேமிப்பு கிடங்குகளின் கொள்திறனை 3.4 மில்லியன் டன்னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x