டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விலகியது தேர்தல் தந்திரம்: மாயாவதி விளாசல்


லக்னோ: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது தேர்தல் தந்திரம் மற்றும் அரசியல் சூழ்ச்சி என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.

அரவிந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் அதிஷி, புதிய அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரியுள்ளார்

இதுகுறித்து மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்வது ஒரு தேர்தல் தந்திரம் மற்றும் அரசியல் சூழ்ச்சி. ஆனால் அவர் நீண்ட காலமாக சிறையில் இருந்ததால் டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற சிரமங்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றி என்ன சொல்வது?. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அரசியல் சண்டையானது பகையின் அளவிற்கு கசப்பாக இல்லாமல் இருந்தால் நல்லது. அப்போதுதான் இதனால் நாடும் பொது நலனும் பாதிக்கப்படாமல் இருக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஜேவர் விமான நிலையம் மற்றும் கங்கா விரைவுச் சாலைத் திட்டங்களுக்கு இடையூறாக இருந்த அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால், உத்தரப் பிரதேசத்தின் முந்தைய பகுஜன் சமாஜ் கட்சி அரசாங்கமும் இதுபோன்ற சூழலை சந்தித்தது என்று மாயாவதி குற்றம் சாட்டினார்.

முன்னதாக, டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், மக்கள் தனக்கு "நேர்மைக்கான சான்றிதழை" கொடுக்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன் என்றும் கேஜ்ரிவால் சபதம் செய்தார்.

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே பிப்ரவரி தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

x