ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை முதல் அமைச்சர் வேட்பாளர் இன்றி சந்திக்க பாஜக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் அக்கட்சியின் முக்கிய முகமான முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஒரிரு மாதங்களில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இவை அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இதில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
ராஜஸ்தானில் பாஜகவின் முக்கியத் தலைவராக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளார். ராஜஸ்தானில் இரண்டு முறை முதல்வராக இருந்த வசுந்தரா, அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தின் தலைவர். இவர் போல், வாஜ்பாய் காலத்தின் முன்னாள் தலைவர்கள் 2014ம் ஆண்டு முதல் பாஜக தலைமையால் ஒதுக்கப்படுவதாகப் புகார் உள்ளது. இதனால், மத்திய அரசின் திட்டங்களுடன் பிரதமர் நரேந்திரமோடியை முன்னிறுத்தி பாஜக ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்ற பாஜக, வசுந்தராவை கடந்த மாதம் தம் தேசியத் தலைவர் பட்டியலில் சேர்த்திருந்தது. ஆனால், அடுத்து ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நிர்வாகக் குழு மற்றும் தேர்தல் அறிக்கைக்குழுவில் வசுந்தராவின் பெயரை சேர்க்கவில்லை. தற்போது, ராஜஸ்தானில் நான்கு கட்ட பரிவர்த்தனை யாத்திரைகளை பாஜக நடத்த உள்ளது. இதில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவிற்கு எந்த முக்கியப் பங்கும் அளிக்கப்படவில்லை.
இந்த யாத்திரைகளுகளை பாஜகவின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். இது, ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளையும் கடந்து செல்லும். பாஜக தலைமையின் இதுபோன்ற நடவடிக்கைகளால் முன்னாள் முதல்வர் வசுந்தராவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதை சமாளித்து மீண்டும் தனது பழைய நிலையை மீட்க அவர் டெல்லியில் கட்சியின் தேசியத் தலைவர்களையும் சந்தித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வசுந்தாரவிற்கு ஆதரவளித்திருப்பதாகத் தெரிகிறது. தொடர்ந்து மேலும் பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ள வசுந்தராவால் பாஜகவிற்கு சிக்கல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டு வருகிறது.
வசுந்தரா மீது பாஜக தலைமை காட்டுவதாகக் கருதப்படும் அதிருப்தி போக்கை வாய்ப்பாகப் பயன்படுத்தவும் ராஜஸ்தான் மாநிலத் தலைவர்கள் தயாராகி வருகின்றனர். பாஜகவின் முதல் அமைச்சர் வேட்பாளராக பலரும் குறி வைத்துள்ளனர். இதில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், மத்திய இணை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவாத், ராஜஸ்தான் பாஜகவின் முன்னாள் தலைவர் சதீஷ் பூர்ணியா, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ராஜேந்தர் ராத்தோர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அதன் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆட்சிக்கு எதிரான சூழலும் நிலவுகிறது. இந்நேரத்தில் வசுந்தராவை முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தா விட்டால், பாஜக வெற்றிக்கு சிக்கல் ஏற்படும் எனவும் ஒரு கருத்து விலவி வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அக்கட்சியின் வெற்றிக்கு முதல் அமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தியதும் ஒரு முக்கியக் காரணம். இந்நிலையில் பாஜக ராஜஸ்தானில் செய்யும் மாற்றம் அதற்கு இழப்பை ஏற்படுத்தும் அச்சமும் உள்ளது.