தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்? - எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!


தேர்தல் பத்திரம்

தேர்தல் பத்திர வழக்கில் தேர்தல் பத்திர தனிப்பட்ட எண்களை ஏன் வழங்கவில்லை என விளக்கமளிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திர திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி, எஸ்பிஐ வங்கியில் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ம் தேதி இத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

பாரத் ஸ்டேட் வங்கி

மேலும், இதுவரை வழங்கிய தேர்தல் பத்திரங்கள் பட்டியல், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள் ஆகிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பட்டது. அதில், கடந்த 2019 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 22,217 தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அவற்றில் 22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மற்ற விவரங்களும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, சீலிடப்பட்ட தேர்தல் பத்திர விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், நீதிபதிகள் ”தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட கூறியிருந்தோம். ஆனால், தேர்தல் பத்திரங்களுக்கான தனிப்பட்ட எண்கள் வெளியிடவில்லை” என்று கூறினார்கள். மேலும், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, எஸ்பிஐ வங்கி சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

x