தங்கம் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது


சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கம் விலை நேற்று மீண்டும் ரூ.55,000-ஐ தாண்டியது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் விலை ரூ.53,440 ஆக இருந்தது. பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. குறிப்பாக, கடந்த 13-ம் தேதி பவுனுக்கு ரூ.960 அதிகரித்து, ரூ.54,600 ஆக இருந்தது. 14-ம் தேதி ரூ.54,920-க்கு விற்பனையானது. இந்நிலையில், ஒரு பவுன் தங்கம் விலை நேற்று ரூ.55,000-ஐ தாண்டியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,865, ஒரு பவுன் ரூ.54,920-க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.15 என பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.6,880-க்கும், ஒரு பவுன் ரூ.55,040-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ரூ.58,680 ஆக இருந்தது.

இதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.98 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி கட்டி விலை ரூ.98,000 ஆகவும் இருந்தது. கடந்த ஜூலை 17-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதால், தங்கம் விலை ரூ.52,400 ஆக குறைந்தது. ஒன்றரை மாதத்துக்கு பிறகு, மீண்டும் தங்கம் விலை ரூ.55,000-ஐ தாண்டியுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமாரிடம் கேட்டபோது, ‘‘அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் எதிரொலி மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது’’ என்றார்

x