‘இந்தியா கூட்டணி’ கட்சிகளுக்குள் சிக்கல் - மும்பை கூட்டத்தில் தீர்வு கிடைக்குமா?


எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்களுக்கு பல மாநிலங்களில் சிக்கல் உருவாகி உள்ளது. இதன் மீது ஆலோசித்து மும்பையின் ஆகஸ்ட் 31 கூட்டத்தில் தீர்வு கிடைக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

எதிர்கட்சிகளின் கூட்டணியாக வளர்ந்து வருவது இந்தியா(இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கவுன்சில்). இதன் இரண்டு கூட்டங்களில் முதலாவதாக பிஹாரிலும், இரண்டாவதாக கர்நாடகாவிலும் நடைபெற்றன. மூன்றாவது கூட்டம் மகராஷ்டிராவின் மும்பையில் ஆகஸ்ட் 31 முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன. எதிர்கட்சிகளின் இக்கூட்டணி, மூன்றாவது முறை தொடர முயலும் பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியை முறியடிக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

எனினும், இந்தியா கூட்டணியை எப்படியும் உடைத்து விடுவது என்ற உறுதியில் பாஜகவும் உள்ளது. இதற்காக, இந்தியாவின் முக்கிய தலைவராக உள்ள சரத் பவாரை தன் பக்கம் இழுப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

மகராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி எனும் பெயரில் காங்கிரஸுடன் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணியாக உள்ளனர். இங்கு என்சிபியில் ஏற்பட்ட பிளவால் குழப்பம் நீடிக்கிறது.

இதற்கு பிரிந்து சென்ற தனது சகோதரர் மகன் அஜித் பவாரை பலமுறை சரத்பவார் சந்தித்து வருவது காரணம். இந்த சந்திப்பை தொடர்ந்து தலைவர் சரத்பவார், தம் என்சிபியில் பிளவு இல்லை என அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும் ஆகிவிட்ட அஜித் பவாரின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதுபோல், பல பிரச்சினைகளால் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே பல மாநிலங்களில் சிக்கல் எழுந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ்(டிஎம்சி) கட்சிக்கு முக்கிய எதிர்கட்சியாக பாஜக வளர்ந்து நிற்கிறது. இங்கு இந்தியா கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களான டிஎம்சி, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் இடையே மாநில அளவில் எந்த கூட்டணியும் இல்லை.

இவர்களில் சிபிஎம், அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட ஆயத்தமாகிறது. இதே நிலை போட்டிக்கு காங்கிரஸிலும் பேச்சுக்கள் உள்ளன. இதுபோல், இம்மூன்று கட்சிகளும் தனியாகப் போட்டியிட்டால், பாஜகவிற்கு சாதகமாக வாக்குகள் பிரியும் நிலை ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது.

அடுத்து காங்கிரஸுடன் இந்தியா கூட்டணியின் மற்றொரு உறுப்பினராக உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் சிக்கல் நிலவுகிறது. ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மற்றும் டெல்லியில் காங்கிரஸ் எதிர்கட்சியாக உள்ளது.

இந்த இரண்டு மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சி மீது கடும் கோபத்தில் உள்ளனர். டெல்லி அதிகாரிகள் சட்டதிருத்த மசோதாவில் மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்கக் கூடாது எனக் குரல் கொடுத்தனர்.

பிறகு, காங்கிரஸ் ஆதரித்தும் அந்த மசோதாவை எதிர்கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியாமல் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதையடுத்து இரண்டு கட்சிகள் மீண்டும் தம் பழைய நிலைக்கு சென்று விட்டன. டெல்லியின் 7, பஞ்சாபில் 13 மக்களவை தொகுதிகள் உள்ளன.

இத்துடன், ஆம் ஆத்மி கட்சி அடுத்து வரவிருக்கும் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்களிலும் தனித்து போட்டி என அறிவித்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களில் ஆம் ஆத்மி பெரிய சக்தியாக இல்லை என்றாலும் அது காங்கிரஸின் கணிசமான வாக்குகளை பிரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு முன், கோவா, குஜராத் சட்டப்பேரவை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸுக்கு இழப்பை ஏற்படுத்தியது. இதில், ஆம் ஆத்மி கோவாவில் 7 சதவிகித வாக்குகளுடன் 2 மற்றும் குஜராத்தில் 5 தொகுதிகளுடன் 13 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தது.

இந்தியா கூட்டாணி

இந்தியா கூட்டணியின் மற்றொரு முக்கியத் தலைவரான பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் சமீபத்திய நடவடிக்கை அதன் உறுப்பினர்களுக்கு அச்சத்தை உருவாக்கி விட்டது. கடந்த ஆகஸ்ட் 16 இல் டெல்லி வந்த முதல்வர் நிதிஷ், மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைந்த தினத்தில் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினார். ஏனெனில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த போது, இரண்டு முறை நிதிஷ் வெளியேறி மீண்டும் திரும்பி இருந்தார்.

கேரளா காங்கிரஸின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் புதுப்பாலி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் காங்கிரஸுக்கு எதிராக, சிபிஎம் ஆளும் கேரள முதல்வர் பி.விஜயன் பிரச்சாரம் துவக்கி உள்ளார். கேரளாவில் காங்கிரஸ் முக்கிய எதிர்கட்சியாக இருந்து வருகிறது.

இதுபோன்ற சூழல், எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும் சவாலாகி விட்டது. இப்பிரச்சினைகளை சரிசெய்தால்தால் அடுத்த வருட மக்களவை தேர்தலில் இக்கூட்டணியால் வெற்றி காண முடியும் நிலை உள்ளது

x