நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மற்றும் கடல் கொள்ளையர்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களைத் தாக்கி அவர்களின் வலை, மீன்கள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று விடுகிறார்கள்.
அதேபோல இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடித்துச் சென்று படகுகளை நாட்டுடைமை ஆக்குவதுடன் மீனவர்களையும் சிறையில் தள்ளி கொடுமைப்படுத்துகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் தமிழக மீன்பிடித் தொழில் நசிந்து விடும் நிலையில் உள்ளது.
கடந்த சில தினமும் தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுந்தீவு அருகே நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை, படகுடன் கைது செய்துள்ளது. அந்த மீனவர்களை காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறது.
மீன் பிடிக்கச்சென்ற நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் இலங்கை கடற்படையினரின் இந்த அராஜகத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தீவிர நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.