குறைந்த வட்டி விகிதம்... தங்க நகைக்கடன் வாங்க தங்கமான வங்கி எது?


தங்க நகைக்கடன்

தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வருவதை அடுத்து தங்க நகைக்கடன் வழங்க வங்கிகள் போட்டியிடுகின்றன. தங்கத்தின் மீது கடன் வாங்க விரும்புவோர் இவற்றின் மத்தியில் உகந்த வங்கியை அடையாளம் காண்பது அவசியமாகிறது.

தங்கம் ஒரு சிறந்த முதலீடு அல்ல என்பவர்கள்கூட தற்போது அதன் எகிறும் விலையை பார்த்து வாய்பிளந்து கிடக்கிறார்கள். ஆபரணத் தங்கம் வாங்குவதில் செய்கூலி, சேதாரம் என இழப்பே அதிகம் என்று வாதிட்டு வந்தவர்களையும் வாயடைக்கும் வகையில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் வீட்டில் முடங்கி கிடக்கும் தங்கத்தை அடமானம் வைத்து ஆக்கபூர்வ தேவைகளில் பயன்பெற விரும்புவோரை, வங்கிகள் இருகரம் நீட்டி அழைக்கின்றன.

ஆபரணத் தங்கம்

வீடுகளில் தங்கத்தை வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல; பத்திரமாக இருக்க வேண்டும் அதே வேளையில் பயன்தரவும் வேண்டும் என்பவர்களும், தங்க அடமானக் கடன்களை நாடுகின்றனர். வீடு கட்டுவோர், தொழிலில் முதலீடு செய்வோர் மற்றும் விருத்தி செய்வோர் மத்தியிலும், தங்க நகைக்கடன் உசிதமான யோசனையாக விளங்குகிறது. தங்க நகைக்கடன் வழங்கும் வங்கிகளில் உரியதை அடையாளம் காண இந்த தகவல்கள் உதவக்கூடும்.

பொதுத்துறை மற்றும் தனியாரை சேர்ந்த வங்கிகள் இங்கே இடம்பெறுகின்றன. அந்த வங்கிகளின் இணையதளத்தில் அறிவிப்பான தகவல்களின் அடிப்படையில் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடனை செயல்படுத்துவதற்கான கட்டணம், மதிப்பீட்டாளர் கட்டணம் உள்ளிட்ட வங்கிகளின் இதர கட்டண விவரங்களை அறியவும், மேலதிக தகவல் மற்றும் ஐயங்களுக்கும், குறிப்பிட்ட வங்கிக் கிளையை நாடலாம்.

தங்க நகை

ரூ.5 லட்சம் தங்க நகைக்கடனுக்கு, 2 வருட கால அவகாசத்துக்கான மாதாந்திர எளிய தவணைகள்(இஎம்ஐ) இங்கே இடம்பெற்றுள்ளன.

இந்தியன் வங்கி: வட்டி 8.65 சதவீதம்; இஎம்ஐ ரூ.22,599.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: வட்டி 8.7%, இஎம்ஐ ரூ.22,610.

பேங்க் ஆஃப் இந்தியா: வட்டி 8.8 சதவீதம்; இஎம்ஐ ரூ.22,631.

கனரா வங்கி: வட்டி 9.25 சதவீதம்; இஎம்ஐ ரூ.22,725.

பஞ்சாப் நேஷனல் வங்கி: வட்டி 9.25 சதவீதம்; இஎம்ஐ ரூ.22,725.

பேங்க் ஆஃப் பரோடா: வட்டி9.4 சதவீதம்; இஎம்ஐ ரூ.22,756.

பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ): வட்டி 9.6 சதவீதம்; இஎம்ஐ ரூ.22,798.

ஹெச்டிஎஃப்சி வங்கி: வட்டி விகிதம் 8.5 சதவீதம்; இஎம்ஐ ரூ.22,568

ஐசிஐசிஐ வங்கி: வட்டி 10 சதவீதம்; இஎம்ஐ ரூ.22,882.

ஆக்சிஸ் வங்கி: வட்டி 17 சதவீதம்; இஎம்ஐ ரூ.24,376.

வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதலில் பொதுத்துறை வங்கிகளும், தொடர்ந்து தனியாருமாக முதல் 10 வங்கிகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவை தேசிய அளவில் கிளை பரப்பியிருக்கும் வங்கிகள் ஆகும். இவற்றுக்கு அப்பால் பிராந்திய அளவில் செயல்படும் பல்வேறு வங்கிகளும், குறைந்த வட்டி விகிதத்தில் நகைக்கடன் வழங்குவதாக அறிவித்துள்ளன. உதாரணமாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தங்க நகைக்கடனுக்கான தங்களது வட்டி விகிதம் 7.30 சதவீதத்தில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இதே போன்று தங்க நகைக்கடனுக்கு என்றே செயல்படும் நிறுவனங்களும், கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை அறிவிக்கின்றன. மேற்படி வங்கிகள் அல்லது கடன் நிறுவனங்களில் தங்க நகைகளை அடமானம் வைப்பதற்கு முன்னர், அவற்றின் நம்பகத்தன்மை, நேரடி கட்டணங்களின் முழுமையான விவரங்கள், மறைமுகக் கட்டணங்கள் ஏதேனும் உண்டா... என்பது உள்ளிட்டவற்றை சொந்தப் பொறுப்பில் உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியமாகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x