ஹரியாணாவில் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் வாங்கிய பாஜக வேட்பாளர்: மாற்றுக்கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு!


சண்டீகர்: பாஜகவின் சிர்சா தொகுதி வேட்பாளர் ரோஹ்தாஷ் ஜங்ரா இன்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் ஹரியாணா லோகித் கட்சித் தலைவர் கோபால் காந்தாவுக்கு பாஜக ஆதரவு அளிக்க உள்ளது.

சிர்சா தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவான கோபால் காந்தா, கடந்த 5 ஆண்டுகளாக பாஜக அரசுக்கு தனது ஆதரவை வழங்கி வந்தார். எனவே இம்முறை அவருக்கு எதிரான போட்டியிலிருந்து விலக பாஜக முடிவெடுத்துள்ளது.

வேட்புமனுவை வாபஸ் பெற்றது குறித்துப் பேசிய ரோஹ்தாஷ் ஜங்ரா, “நான் எனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளேன். மாநிலம் மற்றும் நாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது... 'காங்கிரஸ் இல்லாத ஹரியாணா' என்பதை உறுதி செய்ய வேண்டும். கோபால் காந்தா ஐந்து ஆண்டுகளாக எங்களுக்கு (பாஜக) ஆதரவளித்துள்ளார். சிர்சாவின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று ஜாங்ரா கூறினார்.

முன்னதாக இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) சிர்சாவில் கோபால் காந்தாவுக்கு ஆதரவளிப்பதாக வியாழக்கிழமை தெரிவித்தது. ஐஎன்எல்டி பகுஜன் சமாஜ் கட்சியுடன் (பிஎஸ்பி) கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.

மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 89 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பிவானி தொகுதியை சிபிஐ(எம்) க்கு விட்டுக் கொடுத்துள்ளது காங்கிரஸ். அதேபோல பாஜகவும் தற்போது 89 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது.

\ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக இம்முறை ஹரியாணாவில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கடுமையான சவாலை கொடுத்துவருகிறது.

x