போராடும் மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தை அழைத்தார் மம்தா பானர்ஜி: தீருமா பிரச்சினை?


கொல்கத்தா: பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக போராடும் மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் ஜூனியர் மருத்துவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தையை, நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை எனக்கூறி மருத்துவர்கள் புறக்கணித்தனர். இதனால் 2 மணி நேரம் காத்திருந்த மம்தா ஏமாற்றத்துடன் திரும்பினார். அதன்பின்னர் நேரடியாக மருத்துவர்கள் போராடும் இடத்துக்கே சென்று, போராட்டத்தை கைவிட முதல்வர் மம்தா வலியுறுத்தினார்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஐந்தாவது மற்றும் இறுதி அழைப்பை முதல்வர் மம்தா பானர்ஜி அனுப்பியுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மருத்துவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திறந்த மனதுடன் கலந்துரையாடுவதற்காக சந்திக்குமாறு வலியுறுத்தியுள்ளார். "நல்ல உணர்வு மேலோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பு அல்லது வீடியோகிராபி எதுவும் இருக்காது. ஆனால் பேச்சுவார்த்தை இரு தரப்பாலும் பதிவு செய்யப்பட்டு கையொப்பமிடப்படும் "என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அதே குழு இன்று மாலை 4.45 மணிக்கு முதல்வரின் இல்லத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு தொடர்பாக மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் பிறகு அவர்கள் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொள்கிறார்களா என்பது தெரியவரும்.

x