நடிகர் அமிதாப் பச்சனின் பாடலுக்கு தலையில் பீர் பாட்டிலை வைத்து மூதாட்டி நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் எந்த விசேஷம் என்றாலும் அதில் நீக்கமற நிறைந்திருப்பது மது தான். இதன் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வயிற்று வலி, ரத்த வாந்தி, மயக்கமடைதல், கல்லீரல், புற்றுநோயல் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். 2011-ம் ஆண்டில் இருந்து 2050 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மது குடிப்பதால் மொத்தம் 25 கோடியே 80 லட்சம் மக்கள் உயிர் இழப்பார்கள் என்று ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் மது உள்ளிட்ட போதைப்பழக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் பலர் அடிமையாகி விடுகின்றனர் என்ற தகவல் கவலையளிக்கிறது. இதன் காரணமாக, கல்வி நிலையங்களில் மதுவிற்கு எதிரான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆண்களைப்போல பெண்கள் பலரும் மது குடிக்கின்றனர்.
சிலர் வீட்டில் வாங்கி மது குடிக்கின்றனர். சிலர் பாருக்குச் சென்று மது குடிக்கின்றனர். அப்படி ஒரு ரெஸ்டோ பாரில் (உணவு உள்ளிட்டவை வழங்கும் பார்) மூதாட்டி ஒருவர் பீர் பாட்டிலோடு ஆடும் ஆட்டம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
புடவை கட்டிய அந்த மூதாட்டி, நடிகர் அமிதாப் பச்சன் நடித்த 'லாவரிஸ்' திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். 'மேரே ஆங்னே மே' என்ற அந்த புகழ்பெற்ற பாடலுக்கு அந்த மூதாட்டி உற்சாகமாக விரல்களை வாயில் வைத்து விசிலடித்தபடி ஆட அவருக்கு வாலிபர் ஒருவர் உற்சாகமூட்டுகிறார். தலையில் பீர் பாட்டிலை வைத்து அது கீழே விழாமல் மூதாட்டி ஆடும் லாவகம் பார்ப்போரை ஆச்சரியப்படுத்துகிறது.
இந்த நடன ரீலை உருவாக்கிய சித்தேஷ் போபாடி, தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதன்படி பதிவேற்றம் செய்யப்பட்ட மூன்று நாட்களில் 5.4 மில்லியன் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. சிலர் மூதாட்டியின் நடனத்தைப் பாராட்டினாலும், பீர் பாட்டிலுடன் அவர் ஆடுவதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.