பாட்னா: ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பிஹாரில் ஒரு மணி நேரத்துக்குள் மதுவிலக்கை ரத்து செய்துவிடுவோம்” என்று ஜன் சுராஜ் தலைவரும் அரசியல் வியூகருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் நோக்கில் தற்போது அவர் புதிய கட்சியைத் தொடங்கினார். பிரபலமான அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோர், 2022-ம் ஆண்டு, பிஹார் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஜன் சுராஜ் என்றபிரச்சார அமைப்பைத் தொடங்கினார். வரும் அக்டோபர் 2-ம் தேதி அந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி, அடுத்த ஆண்டு பிஹாரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பிஹாரில் தற்போது உள்ளமதுவிலக்கு கட்டுப்பாடு பயனற்றது. அது சட்டவிரோதமாக மதுபானங்களை வீட்டுக்கே விநியோகம் செய்ய வழிவகுத்தது, மது தடையால் பிஹார் ரூ.20,000 கோடி கலால் வரியை இழக்கிறது. ஜன் சூரஜ் ஆட்சி அமைத்தால் ஒரு மணிநேரத்துக்குள் பிஹாரில் மதுவிலக்கை ரத்து செய்துவிடுவோம். நிதிஷ் குமாரும் தேஜஸ்வி யாதவும் பிஹாருக்கு கெடுதல் செய்துள்ளனர். அவ்விரு கட்சிகளையும் பிஹாரை விட்டு அனுப்ப வேண்டும். பிஹாரில் 243 தொகுதிகள் உள்ளன. இதில் 40 தொகுதிகளில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்