புதுடெல்லி: இந்தியாவில் பணிபுரியும் வயதுடைய மக்கள் தொகை எண்ணிக்கை 2045-ல் 17.9 கோடி அதிகரிக்கும் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
உலக முதலீட்டு நிறுவனமான ஜெபரிஸ் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பணிபுரியும் வயதுடைய (25முதல் 64) மக்கள் தொகை எண்ணிக்கை இப்போது 96.1 கோடியாக உள்ளது. வேலையின்மை விகிதம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுமிகக் குறைவாக உள்ளது. மேலும்வரும் 2045-ம் ஆண்டில் 17.9 கோடிபேர் பணிபுரியும் வயதுடைய மக்கள் தொகையில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் வயதுடைய மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இந்தியபொருளாதார வளர்ச்சிக்கு மிகவும்சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் சேமிப்புமற்றும் முதலீடு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்திய புள்ளியியல் அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, நகரங்களில் ஏப்ரல்-ஜுன் 2023-ல் பணிபுரியும் வயதுடைய மக்கள் தொகையில் 48.8 சதவீதம் பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இது இந்த ஆண்டு ஏப்ரல்-ஜுன் மாதங்களில் 50.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இதே காலத்தில் பெண்களின் பங்கு23.2 சதவீதத்திலிருந்து 25.2% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை 17 கோடி அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் கூறுகிறது. 2014-15-ல்47.15 கோடியாக இருந்த வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை, 2023-24-ல் 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது