ஒரே நாடு ஒரே தேர்தல்... குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்பித்தார் ராம்நாத் கோவிந்த்!


ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வறிக்கையை சமர்பித்தார் ராம்நாத் கோவிந்த்

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனித் தனியே தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நடைமுறையால் தேர்தல் செலவு மற்றும் நிர்வாக திறன் வீணடிக்கப்படுதாக கூறப்படுகிறது. இதை சரிசெய்ய நாடு முழுவதும் ஓரே நேரத்தில் மக்களவை, பேரவை தேர்தல்களை நடத்துவது குறித்து பாஜக அரசு முன் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்தக் குழுவில் எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் இந்தக் குழு அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளை பெற்றது இந்தக் குழு. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட 18,626 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று சமர்பித்தது இந்தக் குழு

இந்த அறிக்கையின் மீது குடியரசுத் தலைவர் எடுக்கவிருக்கும் முடிவுகளைப் பொறுத்தே 2029-ம் ஆண்டு முதல், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமலுக்கு வருமா என்பது தெரியவரும். இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிக்கட்சிகள், ”இதெல்லாம் இந்தியாவுக்கு ஒத்துவராது” என்று விமர்சனம் செய்துவருகின்றன. இதனால் ஒருவேளை, தேர்தலுக்குப் பிறகு பாஜக இல்லாத புதிய அரசு மத்தியில் அமைந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்னாகும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

x